தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில், திருக்கார்த்திகை திருவிழா வினோதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்
600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதி
விவசாயம் பருவ மழையை மட்டும் நம்பியுள்ளது. கிணற்று பாசனம் கிடையாது. நெல், பருத்தி,சோளம், மிளகாய், உளுந்து மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் சுமார் 300 வருடங்களுக்கு மேலாக பல தலைமுறைகளாக
நடைபெற்று வரும் திருக்கார்த்திகை திருவிழா வினோதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில்
ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும், பனை ஓலையை ஒன்றாக
கட்டி நீளமாக கையில் எடுத்து அதில் தீயை வைத்து வீட்டில் இருந்து எடுத்து வந்து, அனைவரும் ஒன்றாக கூடி ஊருக்கு கடைசியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே தீ பற்ற வைத்து கொண்டு வந்த பனை ஓலையை போட்டு மொத்தமாக எரிக்கின்றனர். இதில் உப்பு, மிளகாய் போடு கின்றனர்.
பின்னர் முழுவதும் எரிந்த பின்பு,கரித்தூசியை எடுத்து சென்று, வயல் வெளியில்
தூவுகின்றனர். இதனால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது இவர்களது நம்பிக்கையாகும். முன்னொரு காலத்தில் சோளத்தட்டையில் தீயை வைத்து இவ்வாறு செய்து வந்தார்களாம். தற்போது சோளத்தட்டை அதிகமாக கிடைக்காததால் பனை ஓலையில் செய்து வருகின்றோம் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.