தாராபுரத்தில் ‘மகாசேனா’ பட வெளியீட்டு விழாவுக்கு எஸ்.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த நடிகர் பேனா மணிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எஸ்.வி.ஆர். மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ‘மகாசேனா’ திரைப்படம் இன்று மாலை 5.10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் விழாவும் அதே நாளில் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நடிகர் பேனா மணி அவர்களுக்கு உள்ளூர் மக்கள் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.
‘மகாசேனா’ படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ளார். விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோருடன் இணைந்து பேனா மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாகியுள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு, தாராபுரம் மக்கள் பேனா மணிக்கு ரோஜா மாலை அணிவித்து, டிரம் செட் மேலங்கள் முழங்க திரையரங்கிற்கு அழைத்து வந்தனர். திரையரங்கில் அவருக்கு இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர். மேலும், டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பெண்கள் உள்பட ஏராளமான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
20 ஆண்டுகளாக 85 படங்களில் நடித்துள்ளேன் என்று பேனா மணி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“எனது 86-வது படமான ‘மகாசேனா’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். தாராபுரம் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் அனைவரும் தியேட்டர் வந்து இந்தப் படத்தை பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
யாளி சிலை, யானை சம்பவங்கள், மலைவாழ் மக்கள், காதல் கதை, அப்பா–மகள் பாசம், பழிவாங்கும் சம்பவங்கள் என பல கதைகளை இணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சியாக இருக்கும் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்கவும்” என அவர் கேட்டுக்கொண்டார்.