திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள். வலங்கைமான் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேச்சு.
வலங்கைமான், டிச.14- திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் கொட்டையூர், அரவூர், கிளியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வரவேற்றார். அப்போது அவர் கூறியதாவது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.
அதிமுக ஆட்சி அமையாததால் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொண்டு வந்த நலத்திட்டங்களை மக்கள் இழந்திருக்கிறார்கள். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி. மகளிர் உரிமை தொகைக்கு ரூபாய் 8 ஆயிரம் கோடி. குடும்பத் தலைவர்களிடம் இருந்து டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூபாய் 48 ஆயிரம் கோடியை வசூல் செய்து அதில் ரூ 8 ஆயிரம் கோடியை குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக வழங்குகிறார்கள்.
அதிமுக ஆட்சி வந்ததும் உரிய வழியில் வருவாய் உயர்த்தி இதைவிட கூடுதலாக உரிமைத்தொகை வழங்கப்படும். தற்போது உரிமைத் தொகை கூடுதலாக தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தலுக்கு மூன்று மாதம் தான் உள்ளது. 57 மாதமாக என்ன செய்தீர்கள்? இது ஏமாற்று வேலை. இந்த ஏமாற்று வேலை அதிமுகவிடம் இருக்காது. தாலிக்கு தங்கம், மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தினார்கள்.
இலவச அரிசியை நிறுத்திப் பாருங்கள். ஜெயலலிதா கொண்டு வந்த இலவச அரிசியினால்தான் தற்போது பஞ்சம், பசி இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். பால் முதற்கொண்டு எல்லா பொருளும் விலையேறி உள்ளது. இவ்வாறு காமராஜ் எம்எல்ஏ பேசினார்.
இந்த நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இளவரசன், வலங்கைமான் மேற்கு ஒன்றியச் செயலாளர் சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வாசுதேவன், குரு மாணிக்க ஐயா, அதிமுக மாவட்ட பிரதிநிதி ஹாஜா மொய்தீன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜயகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் சங்கர், இணைச் செயலாளர் சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் நடராஜன், கிளைச் செயலாளர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.