காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 04 செல்போன் டவர்களின் 5 லட்சம் மதிப்பிலான 96 பேட்டரிகள் திருடு போனதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன்
தலைமையின் கீழ் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செந்தமிழ்செல்வன் ஆகியோருடன் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்த செல்வம்(24), சென்னை பூந்தமல்லியை சேர்ந்த மாரிலிங்கம்(32), விக்னேஷ்(29), ஏழுமலை (43) ஆகிய நால்வரை சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் வைத்து தனிப்படை விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 செல்போன் டவர்களில் இருந்து 96 பேட்டரிகளை திருடியது தெரிய வந்த நிலையில் அவர்களிடம் இருந்து பேட்டரிகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.