புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், சேத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ்வரா உயர்நிலைப் பள்ளியில் நேற்று (14.12.25) சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பஜன்கோவா வேளாண் கல்லூரியின் மாணவர்கள், அக்கல்லூரி இணைப் பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.
காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், சிப்பிக் காளானில் உள்ள ஊட்டச்சத்துகள், காளான் குடிலின் அமைப்பு, காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்து மாணவர்களான ஸ்ரீதர், தமிழ்மாறன் ஆகியோர் விரிவாக விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து, காளான் குடில் மற்றும் நெல் வைக்கோலை கிருமி நீக்கம் செய்யும் முறைகள், காளான் படுக்கையை தயார் செய்யும் செயல்முறைகள் குறித்து மாணவர்கள் தண்டபாணி, ஸ்ரீராம், சேரன், திருவிசாகன் ஆகியோர் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்தனர்.
மேலும், விவசாயி திரு. கார்த்திகேயனின் காய்கறித் தோட்டத்தில் தென்னங்கீற்றைப் பயன்படுத்தி சிறிய அளவிலான சிப்பிக்காளான் குடிலை அமைத்து, கலந்து கொண்ட விவசாயிகள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
சிப்பிக்காளான் வளர்ப்பிற்கு தேவையான வைக்கோல், பாலிதீன் பை (60 x 30 செ.மீ), தரமான படுக்கை விதைகள், காளான் படுக்கை மற்றும் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களும் விவசாயிகளுக்கு நேரடியாக பார்த்து விழிப்புணர்வு அடையும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அன்பழகன், முன்னோடி விவசாயிகளான சேத்தூர் திரு. ஆறுமுகம், சேத்தூர்-பண்டாரவாடை திரு. கண்ணபிரான் உள்ளிட்டோர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாணவர் நந்தக்குமார் நன்றியுரை வழங்கினார்.