ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில்,நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதரவுடன் சென்னை சமூகப்பணி கல்லூரியின் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான, பொது விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில், “சமத்துவம் காண்போம்” விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் அமலி வரவேற்று பேசினார்.

கல்லூரியின் நிறுவனர் மற்றும் வளாகத் தலைவர் அல்போன்ஸ் பாத்திமா முன்னிலை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். வட்டாட்சியர் ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி
உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை சமூக பணி கல்லூரியின் இயக்குநரும், சமூக நீதி மற்றும் சமத்துவ மையத்தின் தலைவருமான முனைவர் பவனந்தி வேம்பு கூறும் போது, சாதி, பாலினம், பொருளாதார நிலை போன்ற வேறுபாடுகளை மீறி அனைவருக்கும் சம உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் சமத்துவ சமூகத்தை உருவாக்கும் அடித்தளமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தலைமையுரையில், முனைவர் ஜோதிபாசு கூறும் போது, சமூக நீதி தொடர்பான அரசுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் அடித்தட்டு மக்களிடம் முழுமையாகச் சென்று சேர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாணவர்களும் இளைஞர்களும் சமூக மாற்றத்திற்கான முக்கிய சக்தியாக செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

சுரேஷ்குமார், புள்ளியியல் ஆய்வாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, உள்ளிட்டோர் உரையாற்றி, மனித உரிமைகள் பாதுகாப்பு, சமூக பங்கேற்பு மற்றும் சமத்துவ வளர்ச்சி குறித்த ஆழமான கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக, கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய சமூகங்களில் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சமத்துவம் என்பது சட்டங்களால் மட்டும் அல்ல, சமூக மனப்பான்மையிலும் மாற்றம் ஏற்படும்போது தான் அது நிலைபெறும் என்பதே இந்நிகழ்ச்சியின் மைய கருத்தாக வெளிப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் முனைவர் வீரமணி நன்றியுரையாற்றினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *