தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
வழிப்பாதை கோரி கொல்லப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் – தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலையில் பரபரப்பு
300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி கிராம பொதுமக்கள், தங்களது ஊர்களுக்கு செல்ல வழிப்பாதை அமைத்து தரக்கோரி, தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொல்லப்பட்டி கிராமத்தில் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் தினந்தோறும் தாராபுரம் மற்றும் பழனி பகுதிகளுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், தாராபுரம் முதல் பழனி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால், கொல்லப்பட்டி கிராம மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல தற்போது சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கொல்லப்பட்டி கிராம மக்கள், நான்கு வழிச்சாலை அமைக்கும் பகுதியில் உள்ள “கொல்லப்பட்டி பிரிவு” பகுதியில் தங்களுக்கு வருகை மற்றும் போக்குவரத்திற்காக தனி வழிப்பாதை அமைத்து தருமாறு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், அந்த மனுவை அதிகாரிகள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கொல்லப்பட்டி செல்லும் பகுதியை இரண்டாகப் பிரித்து, தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதால், கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்டித்து, கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலை பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த அலங்கியம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அசிஸ்டன்ட் டிவிஷனல் பொறியாளர் தங்கவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் பானுமதி காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், தற்காலிகமாக அந்தப் பகுதியில் கொல்லப்பட்டி கிராம மக்களுக்கு செல்ல வழிப்பாதை அமைத்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர். இருப்பினும், உடனடியாக நிரந்தரமாக வழிப்பாதை அமைத்து தர வேண்டும் எனக் கோரி, பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.