திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதை நினைவுக்கூறும் வகையில் வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் அனைத்து மாற்றுத் திறன் குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வர வேண்டும் என்றும், அவர்களுக்கான அரசு நலத் திட்டங்களையும் பெறுவோம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்பேரணியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். வள மைய ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். மேலும் இப்பேரணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் (பொறுப்பு), பிசியோதெரபிஸ்ட் அரசு, சிறப்பு ஆசிரியர்கள் லத்தீப், எமல்டா ராணி, சிபத்திஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பேரணியானது அம்மையப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. மேலும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.