வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர்,
சென்னை-600 17.

பக்கங்கள் : 224, விலை : ரூ. 150

கவிஞராக அறியப்பட்ட இரவி அவர்களின் இரசிகத் தன்மைக்கான அடையாளம் ‘புத்தகம் போற்றுதும்’. ‘அவ்வுலகம்’ தொடங்கி, ‘கவிதைத்தேன்’ என ஐம்பது நூல்கள் நமக்கு அறிமுகம்!
நூல்கள் அறிமுகத்திற்கு முன்னர் நூலாசிரியர் அறிமுகம் நன்று!
‘கல்விப்பூங்காவில் சிந்தனைப் பூக்கள்!’ எழுதிய மூ.இராசாராம்இ.ஆ.ப. அவர்கள் சுற்றுலாத் துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச்சிறந்த சிந்தனையாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார். இந்த இருவரின் காலம் சுற்றுலாத் துறையின் பொற்காலம்! என்று சொல்லும் அளவிற்கு இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளைச் செய்தனர் என்பது விமர்சன நூலில் கூட ஆவணப்பதிவுகள் அமைவதற்கான சான்று!
நூல் விமர்சனம் என்பது நூலைப் படிக்கத் தூண்டுவதாக அமைதல் வேண்டும். பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் என்ற நூலில் வள்ளுவரோடு 224 அறிஞர்கள் ஒப்புமையாக்கப்படுகின்றனர் என்ற கணக்கு வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்திற்கான் தூண்டில்!
மு.வ. வின் ‘மூவா நினைவுகள்’, ம.ரா.போ. குருசாமி அவர்களின் நூல், நமது வாசிப்பிற்கான விருந்து ஆகும். இதனை அடுத்து அமைவது பேரா. பொன். சௌரிராஜன் அவர்களின் ‘மு. வரதராசன்’ வரலாறு படைப்பு குறித்த சாகித்ய அகாடமி வெளியிடும் ‘மு.வ.’ பற்றி முழுமையான சித்தரிப்புக்கு உதவுபவை.
இந்த நூலைப் படித்தவுடன் முதலில் படிக்கத் தோன்றுவது எம்.எஸ். ஸ்ரீலெஷ்மியின் ;பெண்ணிய நோக்கில் கம்பர்’ என்ற நூல்!
திருக்குறள் அழகினை அமைப்பின் அடிப்படையில் விளக்கும் தண்டபாணி தேசிகரின் நூல், எத்தனையோ முறை ஆய்வுகளுக்கு அடிக்குறிப்பாகப் பயன்படுத்திய நினைவு!

நூலாசிரியர் கவிஞர் அல்லவா? 21 கவிஞர்களின் கவிதை நூல்கள்! கட்டுரைகள் நெடுகினும் பதச்சோறாகக் கவிதைகள்!

பக். 170-ல்,
முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல்!
பக். 172-ல்,
தபால் செலவில் தடுக்கி
அலமாரி இடுக்கில் விழுந்தது
மீண்டும் மீண்டும் கவிதை!
பக். 177-ல்,
பாறையில் உன்
பெயரை எழுதினேன்
சிற்பமாகியது கல்!

எல்லாம் சரி! ‘ஆயிரம் ஹைக்கூ’ பின்னிணைப்புகள், இரவியின் நூலை நமக்கு அறிமுகப்படுத்திகிறது’ ஆனால், இந்த ஐம்பது நூல்களின் பதிப்பு விவரம் பற்றியும் இணைப்பு இருந்திருந்தால், வாசிப்பை நேசிப்பவர்களுக்கு வாய்ப்பாகுமே! அடுத்த பதிப்பில் கவிஞர் ‘இரவி’ நினைவில் கொண்டால் நன்று!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *