மதுரை ரயில் நிலையம் அருகே மேலவெளிவீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் பலியானார் மதுரை ரயில் நிலையம் எதிரே மேலவெளி வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர்.
எல்.ஐ.சி.க்கான புதிய பாலிசி அறிமுகப்படுத்த இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தை முடித்து விட்டு பணியாளர்கள் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். “இரவு 8.30 மணி அளவில் அந்த அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அங்குள்ள அனைத்து அறைகளிலும் வேகமாக பரவத்தொடங்கியது. உடனே ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர்
இதுபற்றிய தகவலின் பேரில் தல்லாகுளம் மற்றும் திடீர் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொருவராக வேகமாக மீட்கும் பணி நடந்தது. ஆனால், அதற்குள் தீ பெரும் அளவில் பரவிவிட்டது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (வயது 55) உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம், தீக் காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில், தீ விபத்து நடந்த கட்டிடத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு தீவிபத்து குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உடன் இருந்தார்.