அய்யம்பாளையத்தில் அனுமதியின்றி சாலையில் அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்கள் – 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட விபத்துகள் புதைவழி கேபிள் கோரி மனு – நடவடிக்கை இல்லை; குண்டடத்தில் திங்கட்கிழமை சாலை மறியல் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்லப்பாளையம் புதூர் பஞ்சாயத்து, அய்யம்பாளையம் சொல்லிக்காட்டு தோட்டம் பகுதியில், அபிராம் சோலார் பவர் எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தால் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் அனுமதியின்றி, தார் சாலையின் பல்வேறு இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக உயர் மின்னழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், சோலார் மின்சாரத்தை கொண்டு செல்ல சாலையின் பக்கவாட்டில் மின் கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் வயோதிகர்கள் கடும் அச்சத்தில் பயணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த மின் கம்பிகள் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவது, மழைக்காலங்களில் மின்சாரம் பாயும் அபாயம் இருப்பது, இரவு நேரங்களில் கம்பிகள் தெளிவாக தெரியாமல் விபத்துகள் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் பலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அய்யம்பாளையம் கிராம மக்கள், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில்,தார் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள சோலார் பவர் மின் கம்பங்களை அகற்றி, புதைவழி கேபிள் முறையில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வருகின்ற திங்கட்கிழமை குண்டடம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, விபத்துகளைத் தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *