பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, நாய்களால் துரத்தப்பட்ட மான் ஒன்று கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை நேரத்தில் பெரிய ஏரி கரையோரப் பகுதியில் மான் ஒன்று ஓடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் மானை துரத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நாய்களின் துரத்தலால் அச்சமடைந்த மான் தடுமாறி கீழே விழுந்து கடுமையாக காயமடைந்ததாகவும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக தகவல் அளித்ததன் பேரில் தூத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த மானின் உடலை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வனவிலங்கு பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மான் அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து உணவு அல்லது தண்ணீர் தேடி கிராமப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக கிராமப்பகுதிகளில் வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் நாய்களின் கட்டுப்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.