திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் தியணைப்பு நிலைய வளாகத்தில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் தீயணைப்புத் துறையுடன் இணைந்து வலங்கைமான் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பார்த்திபன் தலைமையில் பொதுமக்களுக்கு தீயணைப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சியில் தீ விபத்துகள் ஏற்படும் காரணங்கள், தீ விபத்து நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீயணைப்பு உபகரணங்களின் பயன்பாடு மற்றும் அவசர காலங்களில் மக்களின் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்களில் தீ விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தீயணைப்புத் துறை அலுவலர்கள் தீயணைப்பு கருவிகளின் செயல்பாடு குறித்து நடைமுறை விளக்கம் அளித்ததுடன் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை உடனடியாக பயன்படுத்துவதின் அவசியத்தையும் வலியுத்தினர். வேளாண் கல்லூரி மாணவிகள் சமூக பொறுப்புடன் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதன் மூலம் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட்சேத இழப்புகளை குறைக்க முடியும் என பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். வேளாண் கல்லூரியின் ஜந்தாம் குழ மாணவிகள் ஆர்த்தி, கல்பனா, லத்திகா, பவித்ரா, சங்கீதா, விஜயலட்சுமி, யோகசெளமிகா ஆகியோர் பங்கு பெற்றனர்.