பெரம்பலூர்.டிச.26. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 டிசம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 70 மி.மீ., பெய்த மழையளவு 40.73 மி.மீ, ஆகும். 2025 டிசம்பர் வரை பெய்ய வேண்டிய மழையளவு 861 மி.மீ., பெய்த மழையளவு 737.10 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல்லில் 28.185 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், சிறுதானியங்களில் 1.963 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், பயறு வகைகளில் 4.558 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், எண்ணெய்வித்து பயிர்களில் 5.562 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை அமைக்கும் பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது எனவும், மருதடி பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட மின்சார துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் துணை பிரிவு அலுவலகங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே),
ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.