கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தலைமையில்,மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாவது
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணித்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் நகர்ப்புற தூய்மை தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
குறிப்பாக கரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு, இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மற்றும் குடிநீரின் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிடுவதை அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக,நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின் தடையும் இல்லாமல்தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும், குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதே போன்று, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை போர்க்கால அடிப்படையில்விரைந்து சீரமைத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகள்,குடிநீர் வசதிகள்,தெரு விளக்கு வசதிகள்,சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகள் நாள்தோறும் முறையாக நடைபெற்று வருகிறதா என்பது குறித்து தொடர்புடைய அலுவலர்கள்தினந்தோறும் ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திடுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் 4.5 ஆண்டுகளில் 4,500 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகள்,குடிநீர் வசதிகள்,தெரு விளக்கு வசதிகள்,சுகாதார வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,கரூர் மாநகராட்சியில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுள்ளதென கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி),க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன்,மாநகராட்சி ஆணையர் சுதா, மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.