தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு
குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை – 1500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தர்ணா.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலையை தொடங்கக் கூடாது என வலியுறுத்தி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் தாராபுரம்- குண்டடம் அருகேயுள்ள சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், கொழுமங்குளி, சிறுகின்று, கண்ணாண்கோவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ராசிபுரம் – கன்னாங்கோவில் ராசிபலயம் பகுதியில் அமைந்துள்ள கௌரி ஸ்டீல் பழைய இரும்பு உருக்கு ஆலையை மீண்டும் செயல்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கௌரி ஸ்டீல் நிறுவனம் தனது பகுதியில் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஆலையில் எந்தவித பணிகளும் தொடங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி, குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ரமேஷ் அவர்களின் வாகனத்தை கூட பொதுமக்கள் வெளியே எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், இரும்பு உருக்கு ஆலை செயல்படத் தொடங்கினால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விடும் என்றும், ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், உருக்காலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் தூசி துகள்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களில் படிந்து, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் கருகி நாசம் அடையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், நீண்ட காலம் இந்த புகைகளை சுவாசித்தால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த ஆலை செயல்பட்டால், தங்களது பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறி விடும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, கௌரி ஸ்டீல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தை முன்னிட்டு குண்டடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

மேலும், ஏற்கனவே கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலையை எதிர்த்து இதே பகுதிகளில் பொதுமக்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் விவசாய அழிவை காரணமாகக் கொண்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால், குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *