திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக ஐந்து கட்டங்களாக மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரங்களில் ஆலங்குடி, அரித்துவாரமங்கலம், ஆவூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. தொடர்ந்து நாலாவது கட்டமாக நல்லூர் ஊராட்சியில் இனாம் கிளியூர், நல்லூர், அன்னுக்குடி, உத்தமதானபுரம், மூலவாஞ்சேரி, வேலங்குடி, மாளிகை திடல், மணலூர், மதகரம், வீரமங்கலம் உள்ளிட்ட 10 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. வலங்கைமான் தாசில்தார் ரஷ்யா பேகம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி வட்டார வளர்ச்சி அலுவலர்( கி. ஊ) செந்தில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான வீ. அன்பரசன் துவக்கி வைத்தார். முகாம்களில் மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை , பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை, மாவட்டத் தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர கோரி பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் மனுக்கள் வரப்பட்டன. மேற்படி முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.