தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவின் 2-ம் நாள் விழாவான மாட்டுப் பொங்கல் கிராமங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும். கிராமங்கள் பொதுவாக இன்றளவும் உழவு மற்றும் உழவு சார்ந்த தொழில்கள் மூலம் இயங்குகின்றன. விவசாயிகளின் வாழ்வில் கால்நடைகள் உழவுத் தொழிலுக்கு பிரதான உதவியாக உள்ளன. மேலும், பொருளாதாரம் ஈட்டவும், பால் தேவைகளை நிறைவேற்றுவதிலும் கால்நடைகள் பிரதான இடம் பிடிக்கிறன. எனவே, தங்கள் வாழ்வின் அங்கமாக விளங்கும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கலை கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில் காலை முதலே கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளை சுத்தமாக்கி வண்ணம் தீட்டி, கால்நடைகளின் உடலை வண்ணப்பொடிகளால் அலங்கரித்து, புது கயிறுகள் மாற்றி மாட்டுப் பொங்கலுக்கு தயார்படுத்துவர். பின்னர் பகலில் பொங்கலிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, பழம் உள்ளிட்ட பொருட் களை படைத்து பூஜை செய்து கால்நடைகளை வணங்குவர். அந்த வகையில் நடப்பு ஆண்டின் மாட்டுப் பொங்கல் தினமான தருமபுரி மாவட்டத்தின் இலக்கியம்பட்டி கிராமத்தில் கோலாகலமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
கால்நடைகளை ஓரிடத்தில் திரட்டி வழிபாடு நடத்தினர். தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் சாலை மாரியம்மன் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளைத் திரட்டி மலர்களால் அலங்கரித்து விநாயகர் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, கால் நடைகளுக்கு தீபாராதனை காட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாடுகளுக்கு கோயில் பூசாரி தீர்த்தம் தெளிக்கப்பட்டு மாடுகளை விவசாயிகள் ஓடவிட்டு அழைத்துச் சென்றனர் இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் இதனால் சிறிது நேரம் தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.