திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து நாகப்பட்டினம் பகுதிக்கு குடிதண்ணீர் கொண்டு செல்லும் விதமாக பாபநாசம் – வலங்கைமான் காலை வழியாக சாலையின் பக்கவாட்டில் இயந்திரத்தின் உதவியுடன் ஐந்து அடி ஆழத்திற்கு மேலாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டன. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதுமே புழுதி மூட்டமாக காணப்படுகிறது. குடியிருப்பு வாசிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினை பெரிதும் பாதித்து வருகின்றன. இந்நிலையில் சேனியர் தெரு பகுதியில் கும்பகோணம் தனியார் பள்ளி வாகனம் ஒன்றுகுழாய்கள் பொருத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. அதனை அடுத்து அன்று மாலையே மற்றொரு டேங்கர் வாகனம் பள்ளத்தில் சிக்கியது. தொடர்ந்து அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் குழாய்கள் பொருத்தப் பட்ட பள்ளங்களில் மாட்டிக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது என்றும், பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக இப் பிரச்சனைக்கு உரிய நிரந்தரமான தீர்வு காண பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.