திருச்சி சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பெ. அய்யாரப்பன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா ஆகியோரிடம் வழங்கி பேசுகையில்,சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஆகும்.சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர். அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது.
அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். வாகன ஊர்தி ஓட்டுநர்கள்
சிவப்பு வண்ண விளக்கு” நில்” என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு”புறப்படு” என்ற கட்டளை நெறிமுறையை சரியாகப் பின்பற்ற வேண்டும்.
போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது. சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது.
இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.வாகன ஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.
பள்ளிகள்,மருத்துவமனை,முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் சாலைவிதிகளை மதிப்போம் விலைமதித்து விலை மதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் என்றார்.