தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்:நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டகாசம் – முதிய தம்பதியரை தாக்கி 7_பவுன் நகை, பணம் கொள்ளை!

“தண்ணீர் குடுங்க” என்று கதவு தட்டியவர்கள் – அரிவாள் மிரட்டலில் ரூ.1 லட்சம் பறிப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தபுரம் பகுதியில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோவிந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தியாபுரம் பகுதியில் பட்டக்கார தோட்டத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி (65). இவரது மனைவி பாலாமணி (56). கணவன்–மனைவி இருவரும் இரவு சுமார் 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வீட்டின் கதவை தட்டி, “அம்மா தண்ணீர் குடுங்க” என்று சிலர் கேட்டுள்ளனர். இந்த நேரத்தில் யார் தண்ணீர் கேட்கிறார்கள் என எண்ணிய பாலாமணி கதவை திறந்துள்ளார். அப்போது முகத்தில் துணி சுற்றியிருந்த 5 மர்ம நபர்கள் கத்தி, அரிவாள், கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் கதவை பலமாக தள்ளியதில் பாலாமணி கீழே விழுந்தார். மனைவி விழுந்ததை பார்த்த கோவிந்தசாமி அதிர்ச்சியடைந்து அறையிலிருந்து வெளியே வந்தார். உடனே மர்ம நபர்கள் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

பின்னர் பாலாமணியின் கழுத்தில் இருந்த நகை மற்றும் காதில் இருந்த தோடுகளை பறித்தனர். மேலும், “உன் மனைவியை கொன்று விடுவோம். பீரோ எங்கே? சாவி எங்கே?” என கத்தி முனையில் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்த கோவிந்தசாமி, மனைவியை காப்பாற்றும் நோக்கில் பீரோவின் சாவியை கொடுத்தார்.

பீரோவில் இருந்த நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், காயமடைந்த கோவிந்தசாமியை ரத்த வெள்ளத்தில் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, வீட்டின் அருகில் மது பாட்டில்கள் கிடந்ததும், கோவிந்தசாமி ரத்தத்தில் கிடந்ததும் தெரிய வந்தது. உடனே தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த கணவன்–மனைவி இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி அணிந்த மர்மநபர்களை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *