பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்ட Indian Red Cross Society மாவட்ட கிளை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில், போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் ஆ. சண்முகம் அவர்கள் வரவேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் செ. ஜெயராமன் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் ஜூனியர் ரெட் கிராஸ் அலுவல் சார்ந்த துணைத் தலைவர் வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி சி.த. நாகவள்ளி கலந்து கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, காவல்துறை செயலிகள் பயன்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப. தவச்செல்வன் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். போதை மீட்பு மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த திரு. க. ஆனந்தராஜ், போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
மேலும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மேனாள் மாவட்ட தலைவர் நல்லப்பன், நியமன துணைத்தலைவர் அட்வகேட். செல்வராஜ், ஆயுள் உறுப்பினர். சடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வினர் சி. சிவசங்கர் நிகழ்வை சிறப்பாக தொகுத்து ஒருங்கிணைத்தார். இறுதியாக, ஜூனியர் ரெட் கிராஸ் மண்டல அலுவலர் இரா. சேதுராமன் நன்றியுரை வழங்கியதன் மூலம் நிகழ்ச்சி நாட்டுப் பணிவுடன் நிறைவுற்றது.