தாராபுரம் செய்தியாளர் பிரபு.
செல்:9715328420
தமிழ் சினிமா திரைப்பட நடிகையும், சின்னத்திரை சீரியல் நடிகையுமான புவனேஷ்வரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ரெட்டார வலசில் பிரத்தியங்கரா தேவி பீடம் ஒன்றை நிறுவியுள்ளார்.
அதில் தினந்தோறும் பூஜைகளும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடிகை புவனேஷ்வரி கூறியதாவது:- எனது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகும். நான் பல்வேறு தமிழ் சினிமா படங்கள் மற்றும் ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இந்த நிலையில் எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நான் தீவிர ஆன்மீக பணியில் ஈடுபட்டு இருந்தேன்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது கனவில் பிரத்யங்கரா அம்மன் தோன்றி ஒரு இடத்தை குறிப்பிட்டது. நானும் அந்த இடத்தை தேடி அலைந்தேன் முடிவில் அது திருப்பூர் மாவட்டம் ரெட்டார வலசு பகுதியில் உள்ள பிரத்தியங்கரா தேவி அம்மன் என்பதை உணர்ந்தேன்.
அதை தொடர்ந்து நான் இங்கு வந்து இந்த அம்மனை பூஜை செய்து வழிபட்டு வருகிறேன். பிரத்யங்கரா தேவி அம்மன் என்பது பஞ்சபாண்டவர் காலகட்டத்தில் அகத்திய முனிவருக்கு உதவிய அம்மனாகும். இங்குள்ள வராகி அம்மன் இந்திரஜித் வழிபட்ட தெய்வமாகும். அதுமட்டுமின்றி காலபைரவர்,விநாயகர் உட்பட பல்வேறு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளது.
இங்குள்ள பிரத்தியங்கரா தேவி அம்மனை வழிபட்டால் வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களும் விலகும், திருமணம் கைகூடும். வராஹி அம்மனை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், கல்வி பெருகும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் இந்த கோவிலில் வருகின்ற 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குரு பெயர்ச்சி யாகம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து ராசியினரும் கலந்து கொண்டு தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் இக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என புவனேஸ்வரி தெரிவித்தார்.