எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 54 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரபாகரன், செயலாளர் செந்தில், இணைய செயலாளர் ரத்தின சபாபதி, பொருளாளர் ராஜேஷ் ஆகிய முன்னிலை வகித்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு 25% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட 54 பேரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.