ஊதியூர் பகுதியில் 3நாட்களாக தெருநாய்களில் தொடர் அட்டகாசம்
22ஆடுகளைக் கடித்துக் கொன்றன, விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.!

ஊதியூர் பகுதியில் கடந்த 3நாட்களாக தெருநாய்கள் ஆட்டுப்பட்டியில் புகுந்து வேட்டையாடியதில் 22ஆடுகள் பரிதாபமாக இறந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. தெருநாய்களின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று ஊதியூர் பஸ்ஸ்டாப் அருகில் இறந்த ஆடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதியூர், பாப்பினி, படியூர், நத்தக்காடையூர், கள்ளிப்பாளையம், கண்ணான்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் செம்மறியாடுகளை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தெருநாய்கள் பெருகி ஆட்டுப்பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 5ஆண்டுகளில் இந்த பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஆடுகள் தெருநாய்கள் கூட்டத்துக்கு இரையாகியுள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிப் போனது.

இதையடுத்து கடந்த 3ஆண்டுகளாகவே தெருநாய்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரியும் விவாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி இரவு ஊதியூர் அருகேயுள்ள வட்டமலைபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற விவசாயியின் பட்டியில் புகுந்த தெருநாய் கூட்டம் அங்கிருந்த ஆடுகளில் 7ஆடுகளை கடித்துக் கொன்றது. தொடர்ந்து ஊதியூர் காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த கொங்குராஜ் என்ற விவசாயியின் பட்டியில் புகுந்து 12ஆடுகளை கடித்துக் கொன்றது.

நேற்று முன்தினம் இரவு வட்டமலைபாளையம் சக்திவேல் என்ற விவசாயியின் பட்டியில் புகுந்து 3ஆடுகளைக் கடித்துக் கொன்றது. தவிர 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. இற்ந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2லட்சமாகும். தெருநாய்களின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இறந்த ஆடுகளுடன் ஊதியூர் பஸ்ஸ்டாப் பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் ஆர்ஐ மற்றும் குண்டடம் பிடிஓ ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். காங்கயம் தாசில்தார் வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் நேற்று பிற்பகல் 3மணிவரை தாசில்தார் வராத காரணத்தால் இறந்த ஆடுகளை ரோட்டில் போட்டு ஊதியூர் பஸ்ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஈரோடு பழனி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காங்கயம் தாசில்தார் தங்கவேல் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரிடம் இறந்த ஆடுகளுக்கு உடனடியாக இழப்பீடு பெற்று தரவேண்டும், தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக ஊதியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *