திருவாரூர்., பிப். 25
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ,
இதில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், முத்துப்பேட்டை, வலங்கைமான், கூத்தாநல்லூர், நீடாமங்கலம் , குடவாசல் உள்ளிட்ட 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் துறையினர் 639 பேர் பணியாற்றி வரும் நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது ,
இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும்.
அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பணிச்சுமைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் , ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணி நியமனங்களை முற்றிலுமாகத் தவிர்த்து அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பவேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் விரைந்து நிரப்பவேண்டும், ஊழியர்கள் மன அழுத்தமின்றி பணிபுரியும் சூழலை உருவாக்க வேண்டும் மற்றும் துறையின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) 10% பிடித்தத்தை ரத்து செய்து, அத்தொகையை வட்டியுடன் திரும்ப வழங்கவேண்டும் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு TAPS பயன்களை உறுதி செய்யவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொடர் காத்திருப்பு போராட்டமானது நடைபெற்றது.
இதில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டதலைவர் மகேஷ் தலைமையில் மாநிலத் தலைவர் சோமசுந்தரம் , ஒருங்கிணைப்பாளர் கார்த்தி , பொருளாளர் ஜெயக்குமார் நகர தலைவர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறையினர் கலந்துகொண்டனர் ,