வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான சமூக தணிக்கை கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் கடந்த நிதி ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான சமூக தணிக்கை இரண்டு பிரிவுகளாக சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் கடந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடுதல், பனை விதை விதைத்தல் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 12 பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் தொடர்பான சமூக தணிக்கை கடந்த நான்கு நாட்களாக பதிவேடுகள் பராமரிப்பு, 100 நாள் வேலைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நேரடி கள ஆய்வு உள்ளிட்டவை நடைபெற்று வந்த நிலையில் ஊராட்சி செயலக கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் 100 நாள் பணிகளில் ஈடுபடக்கூடிய வயது மூத்த வசந்தா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊராட்சி செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
தீர்மானங்களை புஷ்பலதா வாசித்தார். இக்கூட்டத்தில் வட்டார வள அலுவலர் தணிக்கை வினோத் கலந்து கொண்டு பேசுகையில், இவ்வூராட்சியில் இதற்கு முன்பாக 10 சமூக தணிக்கை கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று உள்ளதாகவும், தற்போது 11- வது சமூகத் தணிக்கை கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது
என்றும் 100 நாள் பணியாளர்கள் மரக்கன்றுகள் நடும் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதனை அடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். கிராமசபை கூட்டத்தில் 100 நாள் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.