கடலூர்,மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சசியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைத் தேர்வு இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வுகள் வரும் 02.03.2026 முதல் தொடங்கப்பட்டு 27.03.2026 வரையில் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வானது மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு, 15,019 மாணவர்களும், 15,020 மாணவிகளும் என மொத்தம் 30,039 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்விற்கு 16 இடங்களில் தனித்தேர்வு மையங்களும், 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், மண்டல அளவிலான 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 3 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 31 வினாத்தாள் வழங்கப்படும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும். தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் ஒருவர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 31 வழித்தட அலுவலர்களும், 129 முதன்மை கண்காணிப்பாளர்களும், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 129 துறை அலுவலர்களும், 7 கூடுதல் துறை அலுவலர்களும், 2,100 அறை கண்காணிப்பாளர்களும், 250 நிலைப்படை/பறக்கும் படை உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிடும் பொருட்டு சிறப்பு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்களை பாதுகாப்பாக கொண்டு சென்றிட ஆயுதம் தாங்கிய காவலருடன் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வானது தங்களுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும் தேர்வு என்பதால் கவனமுடன் வினாத்தாட்களை படித்து நன்கு தேர்வு எழுதிட வேண்டும். மாணவர்கள் எவ்வித ஒழுங்கினச் செயல்பாடுகளிலும் ஈடுபாடாமல் சிறப்பாக தேர்வு எழுதிட வேண்டும். மேலும், நடைபெறும் பொதுத்தேர்வினை எவ்வித அச்சமும் இன்றி, சிந்தனைகளை சிதற விடாமல், தேர்வு முடியும் வரை நாள்தோறும் பாடங்களை நன்கு படித்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ்,மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் உட்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *