மன்னார்குடி,. 03
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.. காவிரி டெல்டா மாவட்டங்கள் 2020 முதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு வேளாண்மை துறையும், சுற்றுச்சூழல் துறையும் இரு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் பாறை எரிவாயு, கச்சா ,மீத்தேன், நிலக்கரி எடுப்பதற்கான அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டுள்ளது.
2016 க்கு பிறகு காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி புதிய கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.
தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தால் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசு இனி காவிரி டெல்டாவில் விவசாயிகளுக்கு விரோதமான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்.விரைவில் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்போம் என ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்ட விரோதமானது, மட்டுமல்ல காவிரி டெல்டாவை அழிக்கும் உள்நோக்கம் கொண்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிதைக்கும் அடிப்படை நோக்கோடு கார்ப்பரேட்டுகளுக்கு துணை போகும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த காவிரி விவசாயிகளை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்ல திமுக அரசு முயற்சிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதுவரையிலும் சுற்றுச்சூழல் துறையில் விண்ணப்பிக்கவில்லை அனுமதியும் பெறவில்லை. சட்ட விரோதமாக அனுமதி பெற முடியாது. இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவான சட்ட விரோதமான இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இஆப ,சிப்காட் இயக்குனர் செந்தில்ராஜ் இ ஆப ஆகிய இருவரும் பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
தேவையானால் இவர்கள் 2 பேர் மீதும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்படும். காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர் சுவையான வகையில் பெருமளவில் கிடைக்கக்கூடிய பகுதி மன்னார்குடி ஒன்றியத்தின் மேற்கு பகுதி ஆகும்.
இப்பகுதியில் மையப்பகுதியாக ஆலங்கோட்டை உள்ளது.முப்போகம் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தேங்காய் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் அதிகம் வளர்க்கப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக விளங்கும் இங்கு ஜவுளி பூங்கா அமைப்பது இயற்கைக்கு புறம்பானது.
அதை சுற்றி இருக்கிற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் அரசு விலைக்கு சிப்காட்டிற்கு அபகரிக்கப்படும். தமிழ்நாடு அரசின் ஜவுளி பூங்கா தொகுப்பு ஒப்பந்த முறைப்படி சாயப்பட்டறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளோடு தான் அமைக்க முடியும்.
இந்நிலையில் இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டால் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் மாசடைந்து திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை போல நிலத்தடி நீரை சாய பட்டறைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை உணர வேண்டும்.
பாசன கட்டமைப்புகளும் அழிந்து போகும் காற்று மாசடையும், ஒட்டு மொத்தமாக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும். எனவே விவசாயிகளையும்நிலத்தடி நீரையும் இயற்கையும் அழிக்கக்கூடிய சட்டவிரோத ஜவுளி பூங்கா அமைப்பதற்கான அனுமதியை
முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்கிற பெயரில் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்க கூடாது.வேலை வாய்ப்பு உண்மை என்று சொன்னால் இதுவரையிலும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டிருக்கிற தொழில் நிறுவனங்களில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு எத்தனை பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை தொழில்துறை விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்.
திமுகவைச் சார்ந்த ஏழை எளிய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலைவாய்ப்பு இழந்து வீதியில் இருக்கிறபோது அவர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் தெரிவிக்க முன்வர வேண்டும்.
ஒட்டுமொத்தமாக விவசாயிகள் ஒன்றிணைந்து இதை எதிர்க்க முன்வர வேண்டும். என வலியுறுத்துகிறேன். விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு தடை விதிக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் திமுக எதிர்ப்புக் களமாக மாறும் என எச்சரிக்கிறேன் என்றார்.