தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மொழிப்புல அவையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் ஜெ.தேவி மகாகவி பாரதியைப் போற்றி, சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருவாடானை,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,முதல்வர் (பொ.முனைவர் மு.பழனியப்பன் ,பங்கேற்று பேசியதாவது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தரத்தினைப் புகழ்ந்து “பாரதியின் தராசு” என்ற பொருண்மையில் பொழிவுரை ஆற்றினார். அப்போது பாரதியும் செல்லம்மாவும் வாழ்ந்த வாழ்க்கை சரிதம் குறித்த நிகழ்வினைக் கூறி, “அன்பு காதலி செல்லம்மா” என்ற பாரதியின் கடித வரிகளை எடுத்துக் கூறினார்.
“உனக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டால் தமிழை நன்றாகப்படி” என்ற பாரதியின் கூற்றை சுட்டிக்காட்டி ‘சக்திதாசன் பாரதி’ என்ற நிலைபாட்டையும், ‘உப்புக்கும் புளிக்கும் என்னை வாழ வைத்தாயா? பராசக்தி’ என்ற பாரதியின் அன்றாட வாழ்வியல் நிலைபாட்டையும் பற்றி விவரித்து உரையாற்றினார். மேலும், நிகழ்வின் பொருண்மையான பாரதியின் தராசு கட்டுரை குறித்த செய்திகளையும் அன்னிபெசன்ட் அம்மையார், வ.வே.சு.ஐயர், மகாத்மா காந்தி ஆகியோர்களைப் பற்றி பாரதி குறிப்பிட்ட கருத்துக்களையும் கூறி, இன்றைய இளைய சமூகம் நலம்பெற உதவும் பாரதியின் சொற்களை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் பேராசிரியர் பெ.பாரதஜோதி தங்களின் வாழ்த்தினைத் தெரிவித்தார்.
பதிவாளர் (பொ), கோ.பன்னீர்செல்வம் பாரதி கூறிய பெண் விடுதலையைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து இலக்கியத்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இரா.தனலெட்சுமி நோக்கவுரை ஆற்றினார்.
நிறைவில் இலக்கியத்துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் அ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். . இலக்கியத்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் சு.மாசிலாமணி இணைப்புரை வழங்கினார்.
இதில்இலக்கியத்துறைப் பேராசிரியர்கள், பிற துறைப்பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் அலுவல்நிலைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.