தமிழ்நாடு அரசு. மாநகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (SBM 2.0) மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மறு சுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி – நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை,
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைபெற்ற இக்கண்காட்சியில், பொதுமக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்து வழங்குவது, அவற்றை எவ்வாறு முறையாக கையாள்வது, மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பாக அகற்றுவது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மொத்த குப்பை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி:
இக்கண்காட்சியில், தினசரி 100 கிலோக்கும் அதிகமாக குப்பை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் 5000 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் செயல்படும் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு, குப்பை பிரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யும் முறைகள் குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளர்களின் சேவைகளை பயன்படுத்தி, பிரிக்கப்பட்ட குப்பைகளை முறையாக வழங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சுமார் 250 பேருக்கு மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். பொதுமக்கள் மற்றும் மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் குப்பை மேலாண்மையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தனர். கண்காட்சியில், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிகள் குறித்து தனியார் நிறுவனங்கள் வழங்கிய விளக்கங்கள் பொதுமக்களுக்கு உறுதியான புரிதலை ஏற்படுத்தின.
இந்நிகழ்வில் SBM ZSO விஜயகுமார் மேற்கு மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் தனபால், மற்றும் அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.