குண்டடம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்.
குண்டடம் அருகே கொடுவாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர் குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடுவாய் பகுதியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி இங்குள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் தலைமை வகித்தார்.
இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியை ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய வட்டத்தைச் 218 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இ-பட்டாக்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என, மொத்தம் 244 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியர் தங்கவேல் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.