கோவை
கோவை வி.எல்.பி கல்லூரியில் “யுவா உத்சவ்–2026” எனும் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா விழா நடைபெற்றது.
கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “யுவா உத்சவ்–2026”எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கலை, இலக்கியம் மற்றும் அறிவுத்திறன் சார்ந்த பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகையும்,பின்னணி பாடகியுமான , ஆண்ட்ரியா ஜெரிமையா கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர்,இளைஞர்கள் தங்களது கனவுகளை உறுதி மற்றும் ஆர்வத்துடன் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்றும், இத்தகைய கலாச்சார நிகழ்வுகள் இளம் மனங்களை வளப்படுத்தி அவர்களின் ஆளுமையை மேம்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் புதுமைப் பார்வை ஆடை அணிவகுப்பு, அரங்க குழு நடனப்போட்டி, தனிப்பாடல் போட்டி, அறிவுத்திறன் வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. மேலும் குறும்பட உருவாக்கப் போட்டி, இசைக்குழு நிகழ்ச்சிப் போட்டி, “மிஸ்டர் மற்றும் மிஸ் யுவா–2026” தேர்வுப் போட்டி போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தன.
இதனுடன் முக ஓவியப் போட்டி, மெஹந்தி போட்டி, மணமகள் அலங்காரப் போட்டி, விளக்கப்பட ஓவியப் போட்டி மற்றும் சிந்தனையைத் தூண்டும் “தமிழ் ஒரு நிமிட விவாதம்” போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலைநயம் வெளிப்பட்டது.
போட்டிகளின் முடிவில் “யுவா உத்சவ்–2026” விழாவின் மொத்த சாம்பியன் பட்டத்தை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கைப்பற்றியது.
இந்த விழாவை கல்லூரியின் கலாச்சார குழு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர் சூர்யகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் செயலர் ஜெய்ஸ்ரீ சூர்யகுமார், முதல்வர் முனைவர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் பிருந்தா, ஆலோசகர் முனைவர் சதீஷ்குமார் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் கௌரி பிரியா ஆகியோர் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர் .