திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செங்கல் சூளை உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றியது தெரியவந்தது. இதனை அடுத்து ஒடிசாவை சேர்ந்த 21 குழந்தைகள் உட்பட 78 பேரை மீட்ட வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து அவர்களின் மறு வாழ்விற்கான உதவித்தொகை வழங்கப்பட்டு ரயில் மூலம் சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.