பொ.மல்லாபுரம் பகுதியில் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், அடிப்படை வசதிகளைச் செய்து தராத அதிகாரிகளைக் கண்டித்து, பொதுமக்கள் “ஓட்டு கேட்டு வர வேண்டாம்” என்று பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 15-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இது குறித்து எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி. எனத் தொடர்ந்து பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினரும், பேரூராட்சி அதிகாரிகளும் மூன்று நாட்களுக்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.
அதன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்தும், இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், “வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் அரசியல்வாதிகளே, ஓட்டு கேட்டு வராதீர்கள்!” எனப் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை
தங்கள் பகுதி நுழைவாயிலில் வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுதா கூறுகையில், “தேர்தல் நேரத்தில் மட்டும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஓட்டு வாங்கிச் செல்கின்றனர்.
வெற்றி பெற்ற பிறகு, எங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகின்றனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அடிப்படை வசதிகளைச் செய்து தராவிட்டால், 15-வது வார்டில் தேர்தலைப் புறக்கணிப்பதோடு, ஓட்டு கேட்டு வரும் எவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம்,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் வைத்துள்ள இந்த வினோதப் பேனர், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.