தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளில் இருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், இத்துறையின் முக்கிய பணியாகும். துறையின் பெயருக்கு ஏற்றவாறு இத்துறை பணியாளர்கள் ஆபத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளை பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு காப்பாற்றுகின்றனர்.
தீ பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதற்காக வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற ஒரு முயற்சியை இத்துறை துவங்கியுள்ளது. பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு நிலைய அலுவலர் பார்த்திபன் தீ பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீ விபத்தால் பாதிப்பு ஏற்பட்டர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார்.