பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அலுவலகத்தையும் தலைவர்களின் சிலைகளையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரான சிவசங்கரின் தந்தையும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ் சிவசுப்பிரமணியன் அவர்களின் நினைவாக அவரது சொந்த ஊரான தேவனூரில் அமைக்கப்பட்ட நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த மண்ணின் மைந்தர் பெரியவர் ஐயா எஸ்.எஸ். அவர்களின் சொந்த ஊரான தேவனூரில் அவரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் திறந்து வைக்க இருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் பல்வேறு இடங்களில் நாம் சிலையைத் திறந்து வைக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை, கலைஞரின் லட்சியங்களை நாம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம்.
அதிலும் இந்த அரியலூர் மண் ஒரு சாதாரண மண் கிடையாது. தமிழ் உணர்வும் திராவிடக் கொள்கைகளும் ஆழமாக வேரூன்றி இருக்கக்கூடிய மண் இந்த அரியலூர் மண். இந்தித் திணிப்பை எதிர்த்துத் தன்னுயிர் தந்த கீழப்பழுவூர் சின்னசாமியைத் தந்த மண் இந்த அரியலூர் மண். கலைஞரின் பொது வாழ்க்கையில் அவரின் மிக மிக முக்கியமான ஒரு போராட்டம் என்றால் அது கல்லக்குடி இரயில் மறியல் போராட்டம். அந்தப் போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்ட பொழுது, அவர் முதலில் அரியலூர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்.
இப்படி கலைஞர் அவர்களின் தியாக வரலாறு எழுதிய அரியலூர் மண்ணுக்கு வந்திருப்பதை நான் உண்மையிலேயே மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன்.
அதேபோல் பெரியவர் எஸ்.எஸ். அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்தவர். அவரை எல்லாரும் சொல்வதுண்டு, கலைஞர் அவர்களுக்கு மட்டுமே கட்டுப்பட்ட ஒரு தொண்டர் என்று அவரைப் பெருமையாகச் சொல்வார்கள். தன் வாழ்நாள் முழுவதும் நம் திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர், உடன்பிறப்புகள் என்றே வாழ்ந்தவர் ஐயா எஸ்.எஸ். அவர்கள்.
கழகத்துக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும், அந்தச் சோதனைகளிலும் கலைஞருக்கு உறுதுணையாக இருந்தவர்தான் ஐயா எஸ்.எஸ். அவர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர். ஆனால் அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஐயா எஸ்.எஸ். அவர்கள்தான்.
தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக ஐயா எஸ்.எஸ். அவர்கள் பாடுபட்டார்கள். நம் கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்கள் ஐயா எஸ்.எஸ். அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய எஸ்.எஸ். அவர்கள் வாழ்ந்த இந்த ஆண்டிமடம் மண், இந்த அரியலூர் மாவட்டத்துக்கு முதன்முதலாக அமைச்சர் பொறுப்பைப் பெற்றுத் தந்த மண் இந்த அரியலூர் மண். கொடுத்தவர் நம்முடைய கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள்தான்.
இன்றைக்கு தினம் அண்ணன் சிவசங்கர் அவர்கள் போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை என இரு பெரும் துறைகளுக்கு அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பராமரிப்பு இல்லாமல் ஓடிய பேருந்துகளையெல்லாம் இன்றைக்குப் படிப்படியாக நவீனப் பேருந்துகளாக அண்ணன் அவர்கள் மாற்றிக் காட்டியிருக்கிறார். பேருந்து சேவையே இல்லாத குக்கிராமங்களுக்குக் கூடப் பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். பழைய பேருந்து பணிமனைகளையெல்லாம் இன்றைக்குப் புதியதாக மாற்றி அதை நவீனமயமாக்கிச் செயல்படுத்தி வருகிறார்.
அண்ணன் சிவசங்கர் அவர்கள் அவரின் சொந்த ஊரான பக்கத்தில் இருக்கக்கூடிய தேவனூரில் ஐயா எஸ்.எஸ். அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில் ஒரு நூலகத்தையும் கட்டியிருக்கிறார். அதேபோல் இங்கு ‘தளபதி அன்பகம்’ என ஒன்றியக் கழகத்துக்கு அலுவலகத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதே மாதிரி அரியலூரில் கலைஞர் அறிவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த அரியலூர் மாவட்டத்தைக் கழகத்தின் இரும்புக் கோட்டையாக அமைச்சர் அண்ணன் சிவசங்கர் அவர்கள் மாற்றி வைத்துள்ளார்.
எனவும் தமிழகத்தில் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் நூலகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சொ.கா.கண்ணன், பிரபாகரன், மாநில இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஆனந்தகுமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் கழக நிர்வாகிகள் மு.கணேசன், லதா பாலு, சந்திரசேகரன், ராஜேந்திரன், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கலியபெருமாள், செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் வீரசிவா, சுபா வசந்தபகலவன், தமிழ்மாறன், குணசீலன், எஸ்.ஆர்.முருகேசன், தர்மராஜ் மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.