பேராவூரணி
பேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார். இதனால் பரபரப்பு.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் வாங்கி 25 நாள்களுக்குப் பிறகுதான் மறு சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்து எவ்வளவு நாள்களுக்குள் சிலிண்டர் வரும் என்று தெரியவில்லை. கேஸ் ஏஜென்சிகளைப் பொருத்து ஒரு வாரத்திற்குள் வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஒரு டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இன்று விடுமுறை என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கம்போல் காலை நேரத்தில் டீ அருந்த வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பேராவூரணி பகுதியில் அதிகாலை முதல் இரவு வரை பலரும் டீ கடைகளில் டீ மற்றும் சிற்றுண்டி அருந்துவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பயணிகள் உள்ளிட்டோர் அதிகாலை நேரங்களில் டீ கடைகளை நாடுவது வழக்கம்.
டீ கடையில் இன்று கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. கடை மூடப்பட்டிருந்ததால் வழக்கம்போல் டீ அருந்த வந்த பொதுமக்கள் சிலர் ஏமாற்றமடைந்து அருகிலுள்ள மற்ற டீ கடைகளுக்கு சென்றனர்.
இதுகுறித்து அருகிலுள்ள சிலர் டீ கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, எங்களிடம் ஒரு வாரத்திற்கு தேவையான கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. தற்போது கேஸ் தட்டுப்பாடு என்ற பிரச்சினை எங்களிடம் இல்லை என்று தெரிவித்தனர்.
ஒரு கடையில் மட்டும் இவ்வாறு கேஸ் தட்டுப்பாடு காரணம் கூறி விடுமுறை அறிவித்திருப்பது குறித்து பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பேராவூரணி பகுதியில் சிறிய பரபரப்பும் ஏற்பட்டது.
பேராவூரணி நிருபர் நீலகண்டன்