திருவாரூர்.
திருவாரூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் ஆய்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.790.40 லட்சம் மதிப்பீட்டில் மடப்புரம் தோணிக்கரை – பாக்கம் கிராமங்களுக்கிடையே வெட்டாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட பாலத்தை மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன், மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இணைந்து திறந்து வைத்தனர்.
தொடர்ந்து கொரடாச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொது பணித்துறையின் சார்பில் ரூ.94.24 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய வகுப்பறைகளை கொண்ட கட்டிடம், மேலும் நபார்டு நிதி உதவியுடன் ரூ.183.50 லட்சம் மதிப்பீட்டில் சாரநத்தம் ஊராட்சி-வேடம்பூர் புலவனாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட பாலம்,
கொரடாச்சேரி அருகே அத்திக்கடை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.304.95 லட்சம் மதிப்பீட்டில் அத்திக்கடை -களத்தூர் இணைப்பு சாலையில் வெண்ணாறு குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள பாலம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொரடாச்சேரி முருகானந்தம் உட்பட அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.