கோயம்புத்தூர், மார்ச் 13:
கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (CDCA) சார்பில், மாவட்ட அளவில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் திரு. ஆர். சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக, வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மகளிர் லீக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மாவட்ட கிரிக்கெட் சங்கங்களால் நடத்தப்படும் மகளிர் லீக் போட்டிகளில் இது ஒரு முன்னோடி முயற்சியாகும். முதற்கட்டமாக 4 முதல் 5 அணிகள் இதில் பங்கேற்க உள்ளன.
மாவட்ட அளவில் திறமையான பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை அடையாளம் கண்டு, அவர்களை தமிழ்நாடு மற்றும் இந்திய அணிகளில் விளையாடத் தயார் செய்வதே இந்த லீக் போட்டியின் முக்கிய நோக்கமாகும். இந்த போட்டிகள் திரு. ஏ.ஜி. குருசாமி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்திய மாவட்டங்களுக்கு இடையேயான மகளிர் போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராகக் கருதப்படும் திருமதி. ரித்திகா அவர்கள், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி வருவது எங்களது சங்கத்திற்குப் பெருமை அளிக்கும் ஒன்றாகும்.
பெண்களின் கிரிக்கெட் ஆர்வத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த மேடையாக அமையவுள்ள இந்த முயற்சிக்கு, ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.