காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு மாதமும் திருக்கோயில் சார்பிலும் உபயதாரர்கள் சார்பிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கல்யாண வரம் வேண்டியும் இத்திருக்கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு கல்யாணம் முடிந்தவர்களும் இந்த உற்சவத்தில் கலந்துகொள்கின்றனர்.

அந்த வகையில் பங்குனி மாத கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த உற்சவத்தை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு முருகப்பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்களும் கல்யாண வரம்வேண்டி வந்தவர்களும் மாலைகளுடன் வந்திருந்தனர்.

காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி 11.30 மணி வரை நடைபெற்றது. திருக்கோயில் தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில் மந்திரங்களும் மங்கலவாத்தியங்களும் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மணாளனுக்கு அரோகரா தெய்வானை நாயகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் வணங்கினர்.

பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். வந்திருந்த அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதமும் சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

கல்யாண உற்சவ ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *