ஈரோடு,புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, ஈரோடு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி பூங்கா ஈத்கா மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பன்மொழி உரை மற்றும் தொழுகைகாலை 9.30 மணி அளவில் தொடங்கிய இந்தத் தொழுகைக்கு, ஈரோடு மாவட்ட அரசு காஜி முனைவர் அல்ஹாஜ் முஃப்தி. மீ. முஹம்மத் கிபயத்துல்லாஹ் தாவூதி,ஜமாலி,பாகியாத் அவர்கள் தலைமை தாங்கினார்.
தக்பீர் முழக்கங்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், அவர் சிறப்புரையாற்றினார். ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்களும் இதில் பங்கேற்றனர்.
அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ், இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொழுகை முறைகளையும், ரமலான் செய்திகளையும் காஜிஷாப் அவர்கள் விளக்கிக் கூறியது அனைவரையும் கவர்ந்தது.
வரலாற்றுப் பின்னணி:
800 ஆண்டு காலத் தொன்மைஇந்த ஈத்கா மைதானத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, ஈராக்கிலிருந்து மார்க்கப் பிரச்சாரம் செய்ய வந்த இறைநேசர் ஹஜ்ரத் ஷேக் அலாவுதீன் பாதுஷா (ரஹ்) அவர்களால் இந்தத் திடல் தொழுகை தொடங்கி வைக்கப்பட்டது.
பேச்சிப் பாறை: முற்காலத்தில் இப்பகுதியில் நின்று பேசினால் எதிரொலிக்கும் என்பதால் இது ‘பேச்சிப் பாறை’ என்று அழைக்கப்பட்டது மன்னர் மானியம்:
1772-ல் இப்பகுதியை ஆட்சி புரிந்த மைசூர் மன்னர் ஹைதர் அலி, இப்பகுதியிலுள்ள ஹஜ்ரத் பசல் ஷா காதிரி,ஜெச்சாபீபி அவ்லியாக்கள் தர்காவிற்கு இந்த நிலத்தை மானியமாக வழங்கினார்.
தந்தை பெரியாரின் பங்களிப்பு:
1917-ல் தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது, நகரின் குடிநீர் தேவைக்காக நீர்நிலைத் தொட்டி கட்டக் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், ஈரோடு வ உ சி பூங்காவில் அடக்கமாகியுள்ள ஹஜ்ரத் பசல் ஷா காதிரி, ஜெச்சாபீபி அவ்லியாக்கள் தர்கா நிர்வாகத்தினர் 25 ஏக்கர் வக்பு வாரிய நிலத்தை நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
இன்று ஈரோடு மாநகராட்சியால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டும் இந்த இடத்தில், ஆண்டுதோறும் ரமலான் மற்றும் பக்ரீத் பெருநாட்களின் போது மட்டும் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொழுகை முடிந்த பின், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ‘ஈத் முபாரக்’ கூறித் தங்களது வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உலக அமைதி மற்றும் சமாதானத்திற்காகச் சிறப்பு துஆ ஓதப்பட்டதுடன் ரமலான் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.