தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளர் பலி – மின்மோட்டார் சரிசெய்யச் சென்ற போது விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணற்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் -அலங்கியம் சாலையில் லட்சுமணபதி என்பவருக்கு சொந்தமான 14 ஏக்கர் தோட்டத்தை, ஜெகதீஷ் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். இந்நிலையில், தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்த மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது.

இதனை சரிசெய்ய தாராபுரம்-திருப்பூர் சாலையில் உள்ள வரபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (42), கருப்புச்சாமி (48), வீரக்குமார் (31), ரஞ்சித் குமார் (31), தினேஷ் (24), கௌதம் (19) உள்ளிட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து மின்மோட்டாரை அகற்ற சத்யராஜ் இறங்கிய போது, திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்த சத்யராஜை உயிரிழந்த நிலையில் மீட்டனர் பின்னர் அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்மோட்டாரை சரிசெய்யச் சென்ற தொழிலாளர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *