கடலூர்,நகர அரங்கம் அருகில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,…
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், கல்லூரிகள் போன்ற வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல், கையெழுத்து இயக்கம், சுயபுகைப்பட பதாகை, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இன்று பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தனது வாக்கினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிடும் வகையிலும் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவ்வித அச்சுறுத்தலின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி,மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் மகேஷ்,கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.