தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 26-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பாசன நீர் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்தோ அல்லது அமராவதி அணையிலிருந்தோ கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், விவசாய நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பயிரிட முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தேவைக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, மருதூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “எங்கள் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ உறுதி அளிக்கும் கட்சிக்கே வாக்களிப்போம்” என முடிவு செய்து, வீடுதோறும் பதாகைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, குண்டடம் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காவல் ஆய்வாளர், நில வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் கிராம மக்கள் நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அலுவலகங்களுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து 2 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

ஆனால் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வரை காலஅவகாசம் கேட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மருதூரில் போராட்டத்தின் முதல் கட்டமாக கிராமத்தில் பதாகைகள் வைக்கப்பட்டன. இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், நாளை முதல் அனைத்து வீடுகளிலும் கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *