வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 15 மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை,7 மாணவர்களுக்கு மறுமதிப்பீடு, 6 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள், ஒரு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்திட பரிந்துரை செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் வலங்கைமான் ஒன்றியத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மு.நாவளவன் தலைமையில் நடைபெற்றது. முகாமை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் துவங்கி வைத்தார்,
வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, குமரேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் விஜயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட 80 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கண், காது, தொண்டை, மனநலம் மற்றும் எலும்பு முறிவு போன்ற பல்வேறு உடல் உறுப்புகளின் பாதிப்புகள் குறித்து முடநீக்கியல் நிபுணர் மணிகண்டன், காது, மூக்கு, தொண்டை நிபுணர் பிரபாகரன், குழந்தைகள் நலப் பிரிவு திருமதி ரேஷ்மா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் முழமையாக பரிசோதித்து உரிய சிகிச்சை அளித்தனர்.
15 மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை, 7 மாணவர்களுக்கு மறு மதிப்பீடு,6 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள், ஒரு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்திட பரிந்துரை செய்யப்பட்டது.
முகாமை மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் வட்டார வளமைய IE ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், என் முறை மருத்துவர், வலங்கைமான், நீடாமங்கலம், திருவாரூர், மன்னார்குடி ஒன்றியங்களை சார்ந்த சிறப்பாசிரியர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.