கோவையில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா: 2328 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி!
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 94 மாணவிகளுக்குப் பதக்கங்களையும், மொத்தம் 2328 மாணவிகளுக்குப் பட்டங்களையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் ‘வளர்ச்சி அடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒருகாலத்தில் தடுப்பூசிக்காகப் பிற நாடுகளை எதிர்பார்த்திருந்த நாம், இன்று கொரோனா காலத்தில் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து உலக நாடுகளுக்குப் பகிர்ந்துள்ளதே இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சிக்குச் சான்று என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் வலுவான பொருளாதாரத்திற்கு ஏற்பத் தரமான கல்வியை வழங்க வேண்டியது அவசியம் என்றும், தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்வோர் விகிதம் 50 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இதனை மேலும் அதிகரிக்க ஒவ்வொருவரும் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இரண்டு குழந்தைகளையாவது படிக்க வைக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய சமூகப் பங்களிப்பு 2035-க்குள் இந்தியாவைக் கல்வியில் சிறந்த நாடாக மாற்றும் எனத் தெரிவித்த அவர், போர் போன்ற சூழல்களால் எரிசக்தித் தேவையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நமது நாட்டின் சொந்த வளங்களையும், உள்நாட்டுத் தயாரிப்புகளையும் அதிகம் பயன்படுத்தப் பழக வேண்டும் என்றார். மேலும், உள்நாட்டு மருத்துவ முறைகள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதோடு, ஒழுக்கத்தையும் கடைபிடித்தால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாக உருவெடுக்கும் என மாணவிகளுக்கு ஊக்கமளித்துப் பேசினார்.