கோவை:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக எருசலேம் நகருக்குள் நுழைந்ததை நினைவு கூரும் வகையில், இன்று உலகம் முழுவதும் ‘குருத்தோலை ஞாயிறு’ கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் குருத்தோலை ஊர்வலங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
கோவை 100 அடி சாலை, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கிய 40 நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான ‘புனித வாரத்தின்’ தொடக்கமாக இந்த குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது காந்திபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தின் தலைமை ஆயர் கிறிஸ்டோபர் தலைமையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் செயலாளர் தேவதாஸ் ரத்தினகுமார், பொருளாளர் தேவராஜ் சாமுவேல் மற்றும் உதவி ஆயர் விகேஷ் மார்கஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலயத்தின் முன்பாகத் தொடங்கிய இந்த ஊர்வலத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது “ஓசன்னா… ஓசன்னா…” என்ற முழக்கங்களை எழுப்பியும், பக்திப் பாடல்களைப் பாடியும் 9-வது வீதி தொடங்கி 100 அடி சாலை வழியாக ஆறாவது வீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர் இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில் போதக சேகர உறுப்பினர்கள், திருமண்டல பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் புனித வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி ‘புனித வெள்ளி’ (Good Friday) அன்று இயேசுவின் சிலுவைப்பாடுகள் நினைவு கூரப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த தினமான ‘ஈஸ்டர்’ (Easter) பண்டிகை கோவையில் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.