ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம் : “பூஜ்ஜியம் நில மதிப்பு – விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசின் சட்டவிரோதம்!” – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கண்டனம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றிய ஜோதியம்பட்டியில், தமிழக இந்து அறநிலைத்துறையின் “பூஜ்ஜியம் நில மதிப்பு” நடவடிக்கைக்கு எதிராக, விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பொதுக்கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டம் ஜோதியம்பட்டி ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி உரையில் கூறியதாவது:

“தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை, விவசாயிகளின் உரிமை பெற்ற இனாம்நிலங்களையும் வீடுமனைகளையும் பூஜ்ஜியம் நில மதிப்பாக அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் 13 லட்சம் ஏக்கர் நிலத்தில், 30 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு, விவசாயிகளின் வீடுகளை பூட்டி வைப்பது, பட்டாக்களை ரத்து செய்வது, 70 ஆண்டுகளாக வசித்து வரும் விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறுவது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது,” என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறினார்:
“இனாம்நிலப் பிரச்சனைக்கும் கோவில் நிலப் பிரச்சனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதனை நாம் இந்தியச் சட்டப்படி ஆதாரங்களுடன் நிரூபித்து காட்டியுள்ளோம். சில அரசியல் கட்சிகள் மட்டுமே விவசாயிகளின் நியாயத்தை ஒப்புக்கொண்டு ஆதரவு அளித்து வருகின்றன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ‘எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்’ எனக் கூறுபவர் என்றாலும், அவருடைய ஆட்சியில் விவசாயிகளின் நில உரிமை பாதுகாக்கப்படவில்லை. அவரின் தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சட்டப்படி வழங்கப்பட்ட பட்டாக்களை இப்போது ரத்து செய்வது பொருத்தமற்றது.

இதைப் பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தெளிவாக கூறியுள்ளார் – ‘பூஜ்ஜியம் நில மதிப்பு’ விவகாரத்திற்கும் பாஜகக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியா முழுவதும் இனாம்நிலங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதோ, அதேபோல தமிழகத்திலும் வழங்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

“புதிய சட்டம் கொண்டு வாருங்கள்” – விவசாயிகள் கோரிக்கை

“உலக வரலாற்றிலேயே விவசாயியின் நிலத்தை பறித்து அவரை வெளியேற்றிய அரசு எதுவும் இல்லை. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இது தொடர்ந்து நடக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் 30 லட்சம் பூஜ்ஜியம் நில விவசாயிகளின் வாக்குகள் திமுகக்கு வேண்டுமென்றால், அவர்களின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்,” என வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறினார்:
“மாவட்டம் தோறும் விவசாயிகளை நேரில் சந்தித்து, திமுக அரசின் நிலக் கொள்கைக்கு எதிராக பெரிய அளவில் கூட்டங்களை நடத்தி வருகிறோம். விவசாயிகளின் உரிமைக்காக, 30 லட்சம் வாக்குகள் தங்கள் சக்தியாக மாறும்,” என்றார்.

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தல்

இக்கூட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதில்,அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.

மேலும், டிசம்பர் 28, 2025 அன்று ஈரோடு விஜயமங்கலம் டோல்கேட் அருகே நடைபெற உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு குறித்தும் அறிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். “இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சங்கம். திமுக, அதிமுக, பாஜக எந்தக் கட்சிக்கும் சார்பில்லாதது; இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக மட்டுமே செயல்படும் அமைப்பு,” என வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வலியுறுத்தினார்.

பலகை திறப்பு மற்றும் கொடி ஏற்றம்

இக்கூட்டம் முடிவில், ஜோதியம்பட்டி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
பலகையை நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி திறந்து வைத்தார்.
சங்கக் கொடியை, கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *