கோவை:
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், வாக்காளர் விழிப்புணர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல கலைஞர் யு.எம்.டி. ராஜா, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் மிகத் துணிச்சலான ஒரு விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். வழக்கமாகச் சுவர் ஓவியங்கள் அல்லது தாள்களில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, வேகமாக ஓடும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து ஓவியம் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
“எனது வாக்கு எனது உரிமை” என்ற முழக்கத்தையும், 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் சித்திரத்தையும் ஓடும் வாகனத்திலேயே தத்ரூபமாக அவர் வரைந்து முடித்தார். பொது இடங்களில் மக்கள் மத்தியில் இத்தகைய புதுமையான முயற்சியைச் செய்வதன் மூலம், தேர்தல் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஆழமாகச் சென்றடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதைத் தாண்டி, அது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இன்றைய இளைஞர்களிடம் இந்தச் செய்தி சென்றடைய வேண்டும் என்பதே இவரது பிரதான நோக்கம்.
சாகசத்தோடு கூடிய இந்த சமூக விழிப்புணர்வு முயற்சி, தற்போது கோவை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.